• மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

  Advertiseme
  nt

  பதிவு செய்த நாள்

  21மார்
  2016 
  00:00
  பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

  ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: தற்போது பயன்பாட்டில் இருக்கும், எடுத்துச் செல்லக் கூடிய, லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. இ புக் ரீடர், உடல்நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறுக்கப்பட்ட சிறிய அளவில் ஆக்கப்பட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளையே அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வகை பேட்டரிகளில், அதில் உள்ளாக உள்ள செல்களுக்கும், மேல் உலோக கவசங்களுக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால், பேட்டரி எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே உள்ளது. 
  லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக வெப்பம் பாதிக்கும் போது, அவை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்படுகையில், அதிக நாட்கள் பயன்பாட்டில் இருந்ததனால், சில வேளைகளில், உள்ளே இருக்கும் செல்களிலிருந்து, எளிதில் நெருப்பு பிடிக்கக் கூடிய எலக்ட்ரோ லைட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம். அதிர்ஷ்டவசமாக, நெருப்பு பிடிக்காமல் இருக்க உள்ளாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருப்பு பிடித்து, கேஸ் வெளியேறாததால், பேட்டரியின் தடிமன் பெருகத் தொடங்குகிறது. இந்த தடிமன் குறைவாக இருக்கும் நிலையில், நாம் அதிகம் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், அது ஸ்மார்ட் போனின் உருவத்தைப் பாழடிக்கும் நிலைக்கு வரும்போது, நாம் இந்த பேட்டரியின் தடிமன் குறித்து கவலைப் படுகிறோம். சில வேளைகளில், நாம் போனுக்குள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் போன்றவற்றை இணைக்கையில், பின்புற மூடியைக் கழட்டி எடுக்கையில், இந்த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விசையில் இருந்து விடுபட்டது போல, வெளியே துள்ளிக் குதிக்கிறது. அல்லது பின்புற போன் மூடியை வெளியே தள்ளுகிறது.

  பேட்டரியை நீக்கும் வழிகள்: இதனால், லித்தியம் அயன் பேட்டரி பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வருவது தவறாகும். பேட்டரியின் உள்ளாக, பல நிலைகளில் பாதுகாப்பான வழி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டல், அதனை நிறுத்தும் வழிகள், உள்ளாக வெப்பம் பரவுவதை அளந்து, அறிந்து நிறுத்தும் வழிகள் போன்றவற்றைக் கூறலாம். இத்தகைய பேட்டரிகள், எந்த நிலையிலும், தீ பிடித்தது என்ற நிலை ஏற்பட்டதில்லை என்றே கூறலாம்.

  வீணான பேட்டரியை என்ன செய்திடலாம்?: எனவே, பயன்படுத்த முடியாத நிலைக்கு, உங்கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி சென்றுவிட்டால், அதனை எடுத்துவிட்டு, அதே அளவிலான, மின் திறன் கொண்ட பேட்டரியைப் புதியதாக வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் சரியான வழியாகும். இருப்பினும், அந்த பழைய பேட்டரியை திடீரென குப்பையில் எரிந்துவிடக் கூடாது. அதனை அழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை வெடித்து அல்லது நெருப்பினை உண்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்க வேண்டும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
  பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்பதை உறுதி செய்தால், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தினையும் இயக்கக் கூடாது. சாதனத்தினை 'பவர் ஆப்' (power off) செய்து, பேட்டரியிலிருந்து மின் சக்தி செல்வதை நிறுத்த வேண்டும். குறிப்பாக அதனை சார்ஜ் செய்திடவே கூடாது. தடிமன் அதிகமாகிப் போன பேட்டரியில், பாதுகாப்பு வளையங்கள் வேலை செய்யாது. எனவே, அது எப்போதும் வெடிக்கக் கூடிய சிறிய பந்து என்று கருத வேண்டும். நம் அறையில், நெருப்பு பிடிக்கக் கூடிய வாயுவை வெளியிடும் சாதனம் ஒன்று உள்ளதாகவே கருத வேண்டும். 

  பேட்டரியை உடனே நீக்குக:
   பயனற்றுப் போன பேட்டரியை உடனே சாதனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதை அழுத்தியோ, அதன் உருவினை மாற்றியோ, வெளியில் உள்ள பின்புற மூடியைச் சரி செய்தோ, பயன்படுத்த முயற்சிக்கவே கூடாது. 
  பேட்டரியைத் துளையிட்டு, அதன் தடிமனைக் குறைக்க முயற்சிப்பது, முட்டாள்தனமான வேண்டாத முயற்சியாகும். உள்ளிருக்கும், உங்களுக்கு அழிவைத் தரக்கூடிய வாயுவினை நீங்களாகவே வலிந்து பெறும் வழி இது. 
  நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தினை நீங்களே திறந்து பார்க்க முடியும் என்றால், அதிலிருந்து பேட்டரியை உங்களால் எடுத்து நீக்க முடியும் என்றால், உடனே பேட்டரியை நீக்கவும். 
  அல்லது அதற்கான தொழில் நுட்ப பணியாளரிடம் கொடுத்து பேட்டரியை எடுத்துவிடவும். அல்லது உங்கள் சாதனத்தினை இந்த பேட்டரி கெடுத்துவிடும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. பேட்டரிக்குள்ளாக, கூர்மையான ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, இந்த வீக்கமுற்ற பேட்டரியின் தடிமனைக் குறைத்துவிடலாம் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். உங்களால் பேட்டரியை நீக்க முடியாவிட்டால், அதனை ஒரு டெக்னீஷியனிடம் கொண்டு செல்ல நாளாகும் என்றால், அந்த சாதனத்தினை, குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். 

  கெட்டுப் போன பேட்டரியை விட்டெரிய வேண்டாம்:
   வீணாகிப் போன லித்தியம் அயன் பேட்டரியை, எந்த நிலையிலும், குப்பைகள் உள்ள இடத்தில் விட்டெறியும் பழக்கத்தினை விட்டுவிடுங்கள். கூர்மையான சாதனம் கொண்டு திறக்க முயற்சித்த பேட்டரியையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்து எறிந்துவிட வேண்டாம். அதுவரை சாதாரண பேட்டரியாய் இருந்தது, திறக்க வேண்டி முயற்சி எடுத்ததனால், எளிதில் நெருப்பினை வழங்கும் அபாயமான ஒரு பொருளாக மாறுகிறது. எனவே, வீட்டில் வைத்திருப்பதும் சரியல்ல. எனவே, சரியான முறையில் அதனை அழித்திட, இதனை விற்பனை செய்திடும் கடைகளை அணுகி அவர்களிடம் தந்துவிடலாம். வெளிநாடுகளில், இதற்கெனவே மறு சுழற்சி மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில், நம் நகரங்களில் அது போன்ற மையங்கள் இல்லை. 
  பேட்டரியை நீக்கியவுடன், அதன் முனைகளை, மின் சாதனங்களை முடக்கப் பயன்படுத்தும் டேப்களைக் கொண்டு மூடவும். இதனால், எதிர்பாராத சூழ்நிலைகளில், இரு முனைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, பெரும் விபத்து நேரும் அபாயம் தடுக்கப்படுகிறது. உங்களால் பேட்டரியை நீக்க முடியாத நிலையில், அது பயன்படுத்தப்படும் சாதனத்தையே பேட்டரி மற்றும் சாதனம் பழுது பார்க்கும் கடைகளுக்குச் சென்று, அவர்கள் உதவியுடன் பேட்டரியை நீக்கி அவர்களிடமே தந்துவிட்டு வந்துவிடலாம்.

  பேட்டரிகள் தடிப்பதனை எப்படி தடுக்கலாம்?: மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், “என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங்களில் இல்லை. ஆனால், இது போல தடிமன் கூடுவதை எப்படி தடுப்பது?” என்ற வினா வரலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ:
  1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்பம் என்பதே ஆகாது. எனவே, அது பயன்படுத்தப்படும் சாதனங்களை, குளுமையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும். அல்லது, வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருப்பதனைத் தடுக்கவும். சிலர் காரில் டேஷ் போர்டில், இந்த வகை சாதனங்களை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். நேரடியாக வெயிலில் சாதனமும், பேட்டரியும் வெப்பமடையத் தொடங்கும். இது பேட்டரியின் தடிமனை நிச்சயம் அதிகரிக்கச் செய்திடும்.
  2. உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தப் போவதில்லையா? உள்ளிருக்கும் பேட்டரியை எடுத்து, குளுமையான இடத்தில் வைத்துவிடவும்.
  3. சரியான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். லித்திய அயன் பேட்டரியைத் தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது அதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள், சாதனத்துடன் தரப்பட்ட சார்ஜர் பழுதாகிப்போன பின்பு, குறைந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நிறுவன சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்த செயலினை மேற்கொள்வது, லித்தியம் அயன் பேட்டரியை, அதிகமாக சார்ஜ் செய்திடும் வழிக்குக் கொண்டு சென்று, விரைவில், அதன் தடிமனை அதிகரிக்கிறது.
  4. பழைய பேட்டரிகளை உடனே மாற்ற வேண்டும். உங்கள் லேப் டாப் பேட்டரி, இதுவரை 5 மணி நேரம் வரை மின் சக்தியினைக் கொடுத்துவிட்டு, தற்போது 30 நிமிடங்களிலேயே தன் பணியை முடித்துக் கொள்கிறதா? பேட்டரியின் உள்ளிருக்கும் பொருட்கள் வீணாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதனை மாற்ற வேண்டும். 
  5. தொடர்ந்து சார்ஜ் செய்திடும் நிலையில், உங்கள் சாதனத்தினை வைத்திருக்க வேண்டாம். பேட்டரி ஒன்றைக் கட்டாயமாக முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சற்றுக் குறைவாக சார்ஜ் செய்வதே, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு நல்லது. எனவே, மின் இணைப்பில் வைத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும், அதனை இணைப்பில் வைத்திருப்பது நல்லதல்ல. வெகுநேரம் தொடர்ந்து பணியாற்றச் செல்வதால், தொடர் மின் இணைப்பில் சார்ஜ் செய்கிறேன் என்ற நிலையை ஏற்க வேண்டாம். இப்போதெல்லாம், இவற்றை சார்ஜ் செய்திட பவர் பேக் எனப்படும் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
  லித்தியம் அயன் பேட்டரியில் நீங்கள் இதுவரை அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், இனி அடிக்கடி அதன் நிலையினைப் பார்த்து மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate