• CHENNAI REAL HERO HATS OFF  கடல்குதிர’’ -கூப்பிடும்போதே வெங்கடேஷ் முகத்தில் டன் கணக்கில் புன்னகை. சென்னை மெரினா கடற்கரையின் செல்லக் குழந்தை இவர். காவல்துறை அதிகாரிகளுக்கே வெங்கடேஷ் மீது அலாதி அன்பு. இருக்காதா பின்னே..? கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ!  இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்!

  வெங்கடேஷுக்கு கடல்தான் முகவரி. நள்ளிரவில் கூட கடலில் நீந்துவாராம். அப்படியொரு காதல் அதன் மீது! ‘‘ஏன்னு தெரியலண்ணே... எனக்குக் கடல்னா உயிர். தாத்தா  கட்டுமரத்துல போய் மீன் பிடிப்பாரு. சின்ன வயசுல நானும் கூடப் போவேன். இவ்ளோ பெரிய கடலை சும்மா உக்கார்ந்து பாக்கறதே அவ்ளோ சந்தோஷம். நான் நீந்தப்  பழகின பின்னாடி அலையோட விளையாடறதுதான் பொழப்பே. நாலு நாளு சாப்பிடாம இருடான்னாலும் இருப்பேன். கடல்ல இறங்காம இருக்கவே முடியாது’’ - என்கிற  வெங்கடேஷ் மீது மெரினா வியாபாரிகளுக்கும் கொள்ளைப் பிரியம்.

  ‘‘தங்கமான பையன்... இந்த உப்புத்தண்ணிக்கும் இவனுக்கும் அப்படி என்னதான் உறவோ! எப்பவும் இங்கதான் கெடப்பான். அப்படி இல்லன்னு வைங்க... புடிக்கவே முடியாது.  கையில ஒரு செல்போன் கூட வச்சிக்க மாட்டான்’’ எனச் செல்லமாகக் கடிந்துகொள்கிறார்கள் அவர்கள். 

  ‘‘திடீர்னு அலை யாரையாச்சும் இழுத்துட்டா, சட்டுன்னு குதிக்க வேண்டியிருக்கும்ணே... அப்ப இந்த செல்போனை ஆள் பார்த்து குடுத்துக்கிட்டிருக்க முடியுமா? அதான்  சனியனை வச்சிக்கறதில்ல. என்னைத் தேடவே வேணாம்... வீடு சிந்தாதிரிப்பேட்டைன்னாலும் இந்த அலை பக்கத்துலதான் எப்பவும் இருப்பேன்’’ என்கிற வெங்கடேஷ்,  பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டு ஆச்சு பல வருஷம். 
  ‘‘அம்மா இருந்தவரைக்கும் கவலைன்னா என்னன்னே தெரியாது. ஸ்கூல் போயிட்டு, அப்படியே பசங்க கூட கடலுக்கு வந்துடுவேன். 

  ஒம்பதாவது படிக்கும்போது, ஏதோ பிரச்னையில் அம்மா பத்த வச்சிக்கிச்சி. அதுக்கப்புறம் ரொம்ப வெறுப்பாயிட்டேன். அப்பாவும் பாசமாதான் இருப்பாரு. கடல் பக்கம்  போவாம வேலைக்குப் போன்னு சொல்றதால எனக்குதான் அவர்கூட செட் ஆவல. சரியா பேசிக்கறதில்ல. இங்க ஒரு பேக் கடைல வேல செஞ்சி சோறு தின்னேன். ஆனா,  அடிக்கடி கடைய வுட்டுட்டு கடலுக்குள்ள ஓடுறதுனால அதுவும் கன்டினியூ ஆவல. 

  இப்ப எனக்கு நிறைய போலீஸ் அண்ணனெல்லாம் ஃபிரண்டுண்ணா. அவங்க கூட சேர்ந்து கடல்ல யாரும் உள்ளப் போவாம பார்த்துக்குவேன். சில பேரு குளிக்கற  பொண்ணுங்கள செல்போன்ல போட்டோ எடுப்பானுங்க. அவனுங்க செல்ல புடுங்கி, ஸ்டேஷன்ல கொடுத்துடுவேன். யாராவது அலையில மாட்டிக்கிட்டா உடனே கடல்ல  பாஞ்சிருவேன். நமக்கு எந்த அலை எப்படின்னு அத்துபடி... எந்த எடம் எப்படின்னும் தெரியும். எவ்வளவு வெயிட்டு ஆளா இருந்தாலும் எப்படியும் இழுத்தாந்துடுவேன்.  மிஸ்ஸானதே இல்ல.

  ஒரே ஒரு தடவை மூணு பசங்க அலையில மாட்டிக்கிட்டப்போ, ரெண்டு பேரத்தான் காப்பாத்த முடிஞ்சுது. ஒரு பையன், ‘அண்ணா... அண்ணா’ன்னு கைய நீட்டிக்  கத்திக்கிட்டே இருந்தான்... நான் அவன்கிட்ட போறதுக்குள்ள அலை அவனை இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு. மூணு நாள் கழிச்சி கரை ஒதுங்குன அவனத்தான் மறக்கவே  முடியல.’’ - கண் கலங்குகிற வெங்கடேஷுக்கு இதே கடல் காதலும் தந்திருக்கிறது.

  ‘‘அதெல்லாம் சின்ன மேட்டர்ணா... நானே சீரியஸா எடுத்துக்கல. ஏதோ பணக்கார வீட்டுப் புள்ள போலருக்கு... அலையில சிக்கின பொண்ணை எப்பவும் போல கரைக்குத்  தூக்கிட்டு வந்தேன். ‘உன்னை மறக்கவே முடியாது’ன்னு சொல்லிச்சு. அதுக்கப்புறம் நாலைஞ்சு தடவை தேடி வந்து தேங்க்ஸ் சொல்லிச்சு. இப்ப ரொம்ப நாளா ஆளக்  காணோம். நம்ம ரேஞ்சுக்கு அதெல்லாம் செட்டாவுமா? பணத்துக்கும் நம்மளைப் புடிக்காது... நமக்கும் அதைப் புடிக்காது. 

  அவ்ளோதான். கடல்ல மாட்டினவங்கள தூக்கிட்டு வந்தா காசு தருவாங்கண்ணா. ஆனா, நான் வாங்கவே மாட்டேன். ஒரு தடவை வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த  தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும். நம்பளால முடிஞ்சத செய்வோம். நம்மள கடவுள்  பாத்துக்குவான்’’ - கறுப்பு வெங்கடேஷின் வெள்ளை மனசு வசீகரிக்கிறது. ‘‘சரி, எதிர்காலம்..?’’

  ‘‘ஒண்ணு... மெரினா ஸ்டேஷன்லயே வேலைக்கு சேர்ந்து இந்த வேலைய இன்னும் நல்லா செய்யணும். இல்லன்னா, இங்கயே ஒரு கடை வைக்கணும். அதாண்ணா  ஆசை’’ என்றவர், கடலில் இறங்கும் இளைஞர் பட்டாளத்திடம் உரக்கக் கத்துகிறார்... ‘‘சுழலு அல பாஸ்... அங்க போவாத!’’ அலையின் பேரிரைச்சலையும் வெல்கிறது அந்த அக்கறைக் குரல்!

  ‘‘ஒரு தடவை காசு வாங்கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும்!’’ என்று கூறினார் வெங்கடேஷ்.
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate