• பித்தக் கற்கள்  பித்தப்பையில் கல்" அறுவை சிகிச்சை தேவையா?
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++

  பித்தப்பை என்பது நமது ஈரலுக்கு சற்றுக் கீழே வலது புறமாக இருக்கும் பியர்ஸ் பழம் போன்ற தோற்றத்தை உடைய ஒரு சிறிய பையாகும்.

  இது ஈரலில் சுரக்கும் பித்த நீரை சேமித்து வைத்திருந்து சாப்பாட்டு வேளைகளில் உணவுக் கால்வாயிற்குள் செலுத்தும் பணியை ஆற்றுகிறது.

  பித்தக் கற்கள்

  இந்தப் பித்தப் பையிற்குள் உள்ள திரவமான பித்த நீரில் கல்லுப் போல படிவுகளாக உருவாவதுதான் பித்தக் கற்களாகும்.

  சிறுமணல் அளவிலிருந்து பெரிய பந்து வரையாக இதன் அளவு வேறுபடலாம். சிலருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டதாக பல கற்கள் உருவாகும்.

  இருந்தபோதும் பித்தக் கற்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும். வேறு தேவைகளுக்காக ஸ்கேன் பரிசோதனை அல்லது சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும் போதே பெரும்பாலும் இவை இருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

  அறிகுறிகள்

  அவ்வாறானால் பித்தப்பையில் கல்லிருந்தாலும் வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இருக்காதா?,
  பிரச்சனைகள் ஏதும் ஏற்படாதா? என்று கேட்பீர்கள்.

  சாதாரணமாக எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது பேசாமல் கிடக்கும். ஆனால் அவற்றால் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே அறிகுறிகள் தோன்றும்

  அந்தக் கற்கள் பித்தப் பையிலிருந்து பித்தக் குழாய்களுக்குள் சென்று அதை அடைத்து நின்றால் அல்லது பித்தப்பையில் கிருமித் தொற்று ஏற்பட்டால் வலி ஏற்படும்.

  இருந்தபோதும் வயிற்றில் தோன்றும் வலிகள் எல்லாமே பித்தக் கற்களால் ஏற்படுபவை அல்ல.

  இதன் வலி பிரத்தியேகமானது. திடீரென ஏற்பட்டு மிகக் கடுமையாக வேதனை அதிகமாகும். இவ் வலியானது பொதுவாக வயிற்றறையில் வலது புறமாகத் தோன்றும்.

  சில வேளை நடுவயிற்றிலும் நெஞ்செலும்புக் கூட்டின் அருகாகவும் அத்தகைய கடும் வலி தோன்றுவதுண்டு. இன்னும் சிலருக்கு வயிற்றில் வலிக்காது, வலது தோள் மூட்டில் வலியெடுப்பதும் உண்டு.

  வலியானது பொறுக்க முடியாததாக இருப்பது மட்டுமின்றி நடந்து திரிவதாலோ வயிற்றை அழுத்திப் பிடிப்பதாலோ, படுக்கையில் கிடப்பதாலோ குறைவதில்லை. ஒரு சில நிமிடங்கள் முதல் ஒரு சில மணிநேரம் வரை இந்த வலியானது நீடிக்கக் கூடும். சிலருக்கு வலியுடன் வாந்தியும் சேர்ந்து வருவதுண்டு.

  பித்தப்பையில் கல்லிருப்பதுடன், கிருமித் தொற்றும் ஏற்பட்டிருந்தால் கடுமையான காய்ச்சல் நடுக்கத்துடன் வருவதுண்டு. ஒரு சிலருக்கு சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் கழிவதுடன், கண்களிலும் மஞ்சள் நிறம் படரலாம்.

  பித்தக் கற்கள் தோன்றக் காரணம் என்ன?

  பித்தக் கற்கள் ஏன் தோன்றுகின்றன? என்பதற்கு சரியான காரணங்கள் தெரியாது. ஆயினும் பல விசயங்களைச் சந்தேகிக்கிறார்கள்.

  ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரால் அளவானது இயல்பை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம்.

  பொதுவாக ஈரலானது இரத்தத்தில் உள்ள கொலஸ்டராலை உறிஞ்சி பித்த நீர் வழியாக வெளியேற்றுகிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டராலின் அளவு இயல்பு போலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கற்களாக மாறுகிறது என்கிறார்கள்.

  அதேபோல இரத்த நாளம் சிதைவடையும் சிகப்பு இரத்த அணுக்களை ஈரல் பிரித்து பிலிரூபின் (Bilirubin) ஆக வெளியேற்றுகிறது. சில நோய்கள் காரணமாக (ஈரல்சிதைவு, குருதி நோய்கள், பித்தக்குழாயில் கிருமித் தொற்று) சிகப்பு இரத்த அணுக்கள் அதிகளவில் சிதைந்தால் அதன் செறிவு பித்த நீரில் அதிகரிக்கும். அதனாலும் கற்கள் தோன்றலாம்.

  அதேபோல பித்தப் பையால் இருக்கும் பித்த நீரை உணவுக் கால்வாயிற்குள் வெளியேற்றும் முறையில் (கல் கட்டி போன்றவற்றால்) தடை ஏற்பட்டாலும் பித்தக் கற்கள் தோன்றும் வாய்ப்புண்டு.

  • கொலஸ்டரால் அதிகரிப்பால் தோன்றும் பித்தக் கற்கள் மஞ்சள் நிறமாகவும்,
  • பிலிருபின் அதிகரிப்பதால் உண்டாகும் கற்கள் கருமையாகவோ கடும் பிரவுண் நிறமாகவோ இருப்பதை இவ்விடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

  யாருக்கு வரும்

  பித்தக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன? என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதை ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.

  பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது. குறைந்த வயதினரிடையேயும் தோன்றலாம்.

  உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த, கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

  நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப்படுகிறது. கர்ப்பகாலத்திலும் சாத்தியம் அதிகமாகும்.

  நோய்கள் காரணமாகவோ அல்லது எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.

  பித்தப் பையை அகற்றல் சரியா?

  கற்களால் பிரச்சனை ஏற்படுகிறது எனில் அதற்கான சிகிச்சை பித்தப்பையை அகற்றல்தான் என்பது சரியல்ல.

  'ஏன் சிறு நீர்க்குழாய் கற்களை உடைத்து வெளியேற்றுவதுபோல இதையும் அகற்ற முடியாதா' என கேட்டால் முடியும். ஆனால், உடைத்து வெளியேற்றினாலும் இவை மீண்டும் மீண்டும் வரக் கூடியவை. ஆதலால் பித்தப்பை கற்கள் உருவாகாமல் இருக்கவும், மருந்துகளின் மூலம் கரைக்கவும் உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

  அத்துடன் பித்தப்பை என்பது ஒரு அத்தியாவசிய உறுப்பு அல்ல. அது அகற்றப்பட்டாலும் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வாழ முடியும். என அலோபதி மருத்துவம் கூறினாலும், மாற்று மருத்துவமுறை இதனை ஏற்பதில்லை.

  சாதாரணமாக பித்த நீரானது பித்தப் பையில் சேகரித்து வைக்கப்பட்டு உணவுக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. ஆனால் பித்தப்பையை அகற்றியவர்களில் அது ஈரலிலிருந்து நேரடியாக உணவுக் கால்வாயை அடைகிறது. இதனால் உணவு செறிமானத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடினமான உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் பித்தப் பையை அகற்றிய சிலருக்கு நாளடைவில் வேறு சில உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும்.

  மருந்துகள் உதவுமா?

  அலோபதியில் கரைக்க மருந்துகள் இருந்தாலும் அதன் மூலம் கரைக்க மாதக்கணக்கில் காலம் செலவாகும். உணவுக் கட்டுப்பாடுகளும் அதிகம். மருந்துகளால் கரையாத கற்களும் உண்டு. எனவே தான் அறுவை சிகிச்சையை செய்கிறார்கள்.

  சித்தா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களில் கற்களை கரைக்க மருந்துகள் உள்ளன, இதில் அவர்கள் சொல்லும் உணவுக்கட்டுப்பாடுடன் பொறுமையாக மாதக்கணக்கில் மருந்துகள் எடுத்தால் முழுமையான குணம் கிடைக்கும்.

  பித்தக் கற்கள் தோன்றாமல் தடுக்க முடியுமா?

  பித்தக்கற்கள் ஏன் வருகின்றன? என்பது பற்றி தெளிவான முடிவுகள் இல்லை. இருந்தபோதும் தீய பழக்கவழக்கங்கள் இல்லாத வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்க வழக்கங்களால் கற்கள் தோன்றுவதற்கான சாத்தியத்தைக் குறைக்க முடியும்.

  உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் அடிக்கடி உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

  எடை குறைக்கும் முயற்சியில் இறங்கினால் அதைப் படிப்படியாகச் செய்யுங்கள். வாரத்தில் ஒரு கிலோவிற்கு அதிகம் குறைப்பது கூடாது.

  உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைப் பேணுங்கள். கலோரி அளவு குறைந்த, நார்ப்பொருள் அதிகமான சத்தான உணவு முறையும், தினசரி உடற்பயிற்சியும் தங்களது ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கைக்கு உதவும்.

  இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
  பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
 • You might also like

  No comments:

  Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate